திதிகளில் சிறந்த திதியாம்- திருமாலுக்கு உகந்த திதியாம் ஏகாதசியின் மகத்துவம் அலாதியானது. பார் உய்ய பரந்தாமன் பார்த்தனுக்கு போர்க் களத்தில் பகவத் கீதையைப் பகர்ந்தது ஒரு ஏகாதசி நாளே ஆகும். வைஷ்ணவ சம்பிரதாயம் போற்றிப் புகழும் ஏகாதசி திதி விரதம் மிகுந்த பலன்களை அளிக்க வல்லது. இவ்வாறு ஒரு திதி மிக்க சௌபாக்கியங்களை அளிக்கின்றபொழுது, அதன் ஜோதிடரீதியான புரிதல்களும் பரிகாரப் பரிந்துரைகளும் மக்களுக்கு மிகுந்த நற்பலன்களைத் தருமென்பது திண்ணம்.

ekdesifast

எவ்வாறு ஒரு ஜாதகத்தில் நட்சத்திரம் முக்கியப் பங்குவகிக்கிறதோ, அவ்வாறே திதி, வாரம், யோகம், கரணமும் ஆராயப்படவேண்டும். "உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பதுபோல, "பிரம்மாணம் இல்லாத பரிகாரம் பாழ்' என்று கொள்ள வேண்டும், பிரம்மாணம் என்பதும் பலவகைப்படும். அவை வேத, வேதாந்த, புராண, இதிஹாச சான்றுகளாகவோ, ஆன்றோர் மற்றும் மகான்களின் வாக்காகவோ, ஜோதிடரின் அனுபவ ரீதியான வெற்றிகளாகவோ இருக்க வேண்டும்.

ஒரு பரிகாரத்தின் வெற்றி அதன் பிரம்மாணத்திலே வேரூன்றி இருக் கிறது, இவ்வாறான பிரம்மாணம் கொண்ட பரிகாரம் செய்யும்பொழுது, அதன் வெற்றியில் ஐயம்கொள்ளத் தேவையில்லை.

இந்தவரிசையில் ஏகாதசி திதியின் மகத்துவமும் ஜோதிடரீ தியான பரிந்துரைகளையும் பிரம் மாணங்களையும் இனி பார்க்கலாம்.

இந்த ஏகாதசியானது இருபத்து நான்கு வகைப்படும். ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு சிறந்த பலன் மற்றும் குறிப்பான பரிகாரங்கள் செய்வதற்கு உகந்தநாளாக அமையும். ஷட்திலா ஏகாதசி

ஷட்திலா ஏகாதசி தை மாதம் தேய்பிறையில் வருவது. 2021-ஆம் வருடம் பிப்ரவரி 8-ஆம் தேதி வரும். இந்த ஏகாதசியில் ஆறுவிதமாக எள்ளைக்கொண்டு வழிபடுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது, ஷட் என்றால் ஆறு; திலா என்றால் எள் என்று பொருள்.

முன்னொரு காலத்தில், மகாவிஷ்ணுவின் பக்தையாக ஒரு பெண் வாழ்ந்துவந்தாள். அப்பெண்மணி முறையே எல்லாவிதமான விரதங்களும் இருந்துவந்தாள். மிகுந்த தயாள குணமும் கொண்டிருந்தாள். எனினும் ஏதோ ஒரு காரணத்தால் அன்னதானம் மட்டும் செய்யாமல் இருந்துவந்தாள். எவ்வளவோ விரதங்களால் மனத்தூய்மை பெற்ற அவள், அன்னதானம் அளிக்காததால் வைகுந்தம் சென்றும் பசியால் வாடவேண்டி வந்தது. அதனால் மகாவிஷ்ணு அவளை மீண்டும் பூலோகம் சென்று தேவமாதர் கூறும் ஷட்திலா ஏகாதசியைக் கடைப்பிடித்து வரப் பணித்தார். அவ்வாறே அந்தப் பெண் ஏகாதசி விரதமிருந்து வைகுந்தம் சென்று ஆனந்தமாக வாழ்ந்தாள்.

இந்த ஷட்திலா ஏகாதசியில் எள் கலந்த நீரில் குளித்து, எள்ளுப் பொடியில் அங்கம் துலக்கி, எள்ளினால் ஹோமம், தர்ப்பணம், எள் சாதப் படையல், மற்றும் தானம் என்று ஆறுவகையாகச் செய்வதாலேயே இந்தப் பெயர் பெற்றது. இந்த விரதமிருப்பதால் அன்னதானம் செய்த புண்ணியமும், பூர்வஜென்ம பாவங்களால் வரும் தொல்லைகளும் நீங்கும்.

ஜாதகத்தில் 8-ஆம் பாவம் அதிக பரல் பெற்று, சந்திரன் அதிக பரல் கொடுக்கும் காரகனாகி நின்றால், முன்ஜென்மத்தில் அன்னத்தினால் செய்த பாவம் உண்டு.

மேலும் ஆரூடத்தில், சந்திரன் உதய லக்னத்திற்கோ ஆரூட லக்னத்திற்கோ 8-ல் நிற்க, அந்த இடம் காலபுருஷனின் 2-ஆம் பாவமாகவோ அல்லது உதய, ஆரூட லக்னத் திற்கு 2-ஆம் பாவமாகவோ வந்தால் அன்னத் தினால் தோஷமுண்டு என்று கொள்ள வேண்டும். இதுவே சர்ப்ப கிரகங்கள் சேரும் பொழுது உணவில் விஷமென்று உறுதியாகச் சொல்லலாம். இந்த அமைப்புகளுக்கு பாதசாரத்தையும் பார்க்கவேண்டும்.

மேற்கூறிய அமைப்புகளுக்கு ஷட்திலா ஏகாதசி விரதம் சிறந்த பரிகாரமாக அமையும்.

ஜெய ஏகாதசி

ஜெய ஏகாதசி 2021 பிப்ரவரி 24 அன்று வருகிறது. மாசி மாத வளர்பிறையில் வரும் இந்தநாளின் மகத்துவத்தை இனி காணலாம்.

இந்திர லோகத்தில், மலையவான் என்ற கந்தர்வனும், புஷ்பவதி என்ற அப்சரக் கன்னிகையும் வசித்துவந்தனர். இவர்களின் தொழிலே இந்திரசபையில் ஆடியும் பாடியும் தேவர்களை மகிழ்விப்பதுதான். காமதேவனின் வலையால் இவ்விருவரும் ஒருவரையொருவர் காதலித்துவந்தனர். ஒருநாள் இவர்கள் இந்திர சபையில் ஆடிப்பாடும்போது, காதல் மயக்கத் தில் தவறாக ஆடிப் பாடினர். இதைக்கண்ட இந்திரன் கோபம்கொண்டு இவர்களை பிசாசாக பூமியில் உழலும்படி சபித்துவிட்டான். இருவரும் பேயுருக் கொண்டு இமயமலையில் பனியில் ஒரு குகையில் வசித்தனர். இந்திரனின் சாபத்தால் அவர்கள் தொடு உணர்ச்சி, வாசனை, சுவை முதலானவற்றை இழந்தனர்.

மேலும் பசியால் வாடி வேட்டையாடி உண்டுபிழைக்கும் நிலைக்கு ஆளாயினர். இவ்வாறு ஒருநாள் அவர்கள் அன்றைய நாள் ஜெய ஏகாதசி என்று தெரியாமலே, ஒரு மரத் தடியில் உணவுன்ன மனமில்லாமலும், குளிரா லும் சோர்ந்து அமர்ந்து விட்டனர். அன்றிரவு துவாதசி பிறந்ததும் அவர்கள் சாபம் நீங்கி, முன்போல் பொலிவுபெற்று தேவலோகம் சென்று இந்திரனிடம் நடந்ததைக் கூறினர்.

இந்திரனும் இவர்களின் சாப விமோசனம் கண்டு அதிசயித்து, ஏகாதசியின் அருமைபுரிந்து, பழையபடி அவர்களைப் பணியமர்த்தியது மட்டுமல்லாமல், அவர்கள் சேர்ந்துவாழவும் அனுமதிதந்தான்.

ஜாதகத்தில் 6-ஆம் பாவம் மற்றும் 10-ஆம் பாவாதிபதிகளுக்கு 8-ஆம் பாவ கிரகத் தொடர்போ, பாவமுனைத் தொடர்போ உண்டானால் செய்யும் வேலையில் எதிர்பாரா தவறுகள் அடிக்கடி நேரும். மேலும் கர்மகாரக லக்னத்திற்கு பாதகாதிபதி தொடர்பு ஏற்பட் டாலும் தவறுகளால் தண்டனை பெற நேரும்.

அதேபோல் ஆரூடத்தில் அஸ்தம் 1-ஆம் பாதம், சித்திரை 4-ஆம் பாதத்தில் மேற்கண்ட அமைவிருந்தால், வந்த நபர் தற்போது வேலை யில் இழைத்த தவறால் தண்டனை அனுபவித் துக் கொண்டுள்ளார் என்று தெரியவரும்.

இதற்குப் பரிகாரமாக ஜெய ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் தோஷம் விலகும்.

மற்ற ஏகாதசி விரதங்கள் குறித்த விவரங்கள், அந்தந்த சமயங்களில் வெளியாகும்.